ஏப்ரல் 2040
கரிபியன் கடல்
கடல் குளம் போல அமைதியாக இருந்தது. அலைகள் பெரிதாக எதுவும் இல்லை. அவ்வப்போது துள்ளிக் குதித்த மீன்களும் காற்றுப் பட்டு மெல்ல அசைந்த நீரும் தவிர எந்தச் சலனமும் இல்லை. காற்றும் கடலும் கதை பேசும் மெல்லிய சத்தமொன்று கேட்டுக் கொண்டிருந்தது. நிலவு பிரகாசமாக இருந்தது. கடலில் தெரிந்த நிலவின் பிம்பம் நிலவு கடலினுள்ளே மிதப்பது போலக் காட்டியது. மேகக் கூட்டமற்ற வானில் நட்ஷத்திரங்களும் தெரிந்தன. டொரோண்ரோவில் நட்ஷத்திரங்களைக் காண முடியாது. யாருமற்ற தனித்த அண்டவெளியில் இருப்பது போல கருமையான வெறுமையான வானம். இது சூழல் மாசடைவதால் ஏற்பட்ட தாக்கம். இலங்கையில், தெளிந்த வானில், இரவில் நட்ஷத்திரங்களை பார்த்து,எண்ணி, வளர்ந்தவள் அவள். அவள் வீட்டு முன்றலில் நின்றால் முன்னே விரிந்த வானில் வேடடைக்காரன் தொகுதி பரந்து இருக்கும். மல்லிகையும் இரவு ராணியும் கலந்து வரும் நறுமணத்தை ரசித்தபடி விண்மீன்களை பார்ப்பது அவளுக்கு மிகவம் பிடிக்கும். கடந்த மூன்று வருடமாக பெரிதாக எதையும் பார்க்க முடியாத மன ஏக்கம் ஒன்று இருந்து கொண்டே இருந்தது. அது கப்பல் வெள்ளி , இது வேட்டைக்காரன் என்று ஒவ்வொன்றையும் மனதில் இப்பொழுது ஆழப் பதித்துக் கொண்டாள்.
கடலில் கப்பலின் ஆயிரம் விளக்குகளும் ஒரே வரிசையில் பிரதிபலித்து கார்த்திகைத் தீபங்களாக ஓளிர்ந்த அழகை பார்த்துக் கொண்டு நந்தினி நின்றாள். மனமும் கடல் போல மிக அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. நீண்ட நாள் கனவு. குடும்பத்துடன் ஒரு உல்லாசப் பயணம் கப்பலில் போக வேண்டும் என்பது நீண்ட நாளாகவே மனதில் இருந்து கொண்டு இருந்தது. கல்யாணமாகிக் கனடா வரும் போதே குழந்தை உருவாகி விட்டது. ஒரே சத்தியும் தலைச்சுற்றலுமாக இருந்ததால் ஆங்கிலம் படிக்கவோ வேலைக்குப் போகவோ முடியவில்லை. அதனால் சத்தியன் இரண்டு வேலை செய்ய வேண்டியிருந்தது. இரண்டு பேர் உழைத்தால் தான் இந்த நாட்டில் வீட்டுக் கடன், தண்ணி, மின்சாரக் கட்டணம் எல்லாம் கட்ட முடியும்.
“உங்களால் இப்ப முடியாது நந்தினி . நான் இரண்டு வேலைக்கு போறன்” என்று சத்தியன் சொன்ன போது மிக ஆறுதலாக உணர்ந்தாள்.
அவள் கேள்விப்பட்டிருக்கிறாள். வீட்டுப் பொருளாதாரம் , ஊருக்கு, அம்மா அப்பா வசதியா வாழ, தங்கைச்சிக்கு கல்யாணம், சீதன வீடு என்று பல்கிப் பெருகி ஓயாமல் தொடரும் பணத்தேவைக்காக, கல்யாணம் கட்டி வந்தவுடனேயே கணவன்மார் மனைவியை வேலைக்கு அனுப்புவதை. வேலைக்குப் போவதில் பிழை ஒன்றும் இல்லை. ஆனால் ஊரிலேயே படித்து நல்ல வேலையில் இருந்த பிள்ளைகள், இங்கேயும் ஏதாவது கோர்ஸ் செய்து நல்ல வேலைக்கு போக விரும்புவார்கள். ஆனால் வந்திறங்கி அடுத்த நாளே ஏதாவது பேக்டரி வேலை அல்லது கோப்பிக் கடை வேலையில் சேர்த்து விட்டு விடுவார்களாம் கணவன்மார்கள். படித்தால் காசும் காலமும் செலவாகும். முதல் பிள்ளை உண்டாகி தலைசுத்து, சத்தி என்று தாய் சகோதரங்கள் இல்லாமல் தனியாகக் கஷ்டப்பட்டாலும் சில கணவன்மார் வேலைக்குக் கட்டாயம் போக வேணும் என்று பிடிவாதமாக அனுப்புவினமாம். நிறையக் கேள்வி பட்டு இருக்கிறாள்.
நல்ல வேளை சத்தியன் அப்படி இல்லை. வீட்டில் வேறு யாரும் இல்லாததால் தலையை சுத்தி, சத்தி எடுத்தாலும் தனியாகத் தானே சமாளிக்க வேண்டி இருந்ததைத் தவிர அவளுக்கு வேறு குறை ஒன்றும் இல்லை. அவர் இரண்டு வேலை செய்தால் தான் சமாளிக்கலாம். கல்யாணத்திற்கு முன்னரே சத்தியன் வீடு வாங்கி விட்டதால் சொந்த வீட்டில் இருக்க முடிந்தது. நந்தினியும் சிக்கனமாக இருக்கப் பழகி விட்டிருந்ததால் அவர்களால் ஒரு உல்லாசப் பயணம் போகக் காசு சேர்க்க முடிந்தது. என்றாலும் அகரனுக்கு இரண்டு வயது ஆகுமட்டும் எங்கு செல்வதையும் நினைக்க முடியவில்லை.
அகரன் குறை மாதத்தில் பிறந்த குழந்தை. ஏழு மாதத்தில் வளைகாப்பு செய்வதைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருந்தார்கள். வளைகாப்பு செய்வது எங்கடை தமிழ் மரபு முறை இல்லை என்று சத்தியன் கூறினான் . ஆனால் ஊரில் இருந்து அம்மாவும் தங்கைச்சியும் செய்யச் சொன்னார்கள்.
“பிள்ளை இப்ப எல்லாரும் செய்யினம் தானே. நீயும் செய்து படம் எடுத்து அனுப்பு” என்று அம்மா சொல்லிக்கொண்டிருந்தா.
சத்தியனுக்கு பெரிதாக விருப்பம் இல்லாவிடடாலும் அவளுடைய விருப்பதிற்காக ஓமென்றான் . யார்யாரை அழைப்பது, எங்கே செய்வது, என்ன சாப்பாடு என்று அவள் இரன்டு மூன்று பேருக்கு போன் அடித்து விவரம் கேட்டுத் திட்டமிட்டுக் கொண்டிருந்தபோதே ஒருநாள் வீட்டில் சத்தியன் இல்லாத போது வலி தொடங்கி விட்டது. அவசர அவசரமாக ஊரில் உள்ள அம்மாவுக்கு போன் அடித்தாள். வாய்வா இருக்கும் பிள்ளை. உள்ளி சுட்டுச் சாப்பிடு, இஞ்சித் தேத்தண்ணி குடி என்று அம்மா சொல்லச் சொல்ல எல்லாம் செய்தும் வலி குறையாமல் அப்படியே இருக்க சத்யனுக்கு போன் அடித்தாள் . நல்ல வேளை சத்தியன் ஓய்வு நேரத்தில் இருந்திருக்க வேண்டும். உடனேயே போனை எடுத்திட்டான் . நந்தினி உடனே 911 அடியும். நான் வேலையில லீவு சொல்லிட்டு வாறன் என்று சொல்லி போனை வைத்த உடனேயே 911 க்கு அடித்தாள் . பதினைந்து நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வந்து விட்டது. அருகில் உள்ள சென்டெனரி வைத்தியசாலையில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். உடனேயே பரிசோதித்த மகப்பேற்று மருத்துவர், கருப்பைவாய் பிள்ளை வருவதற்கான அளவில் திறந்து விட்டது எனவும், பன்னீர்குடம் உடைந்து மெல்ல மெல்ல வெளியேறுவதாகவும் கூறினார். பயந்தடித்து சத்தியனுக்கு அடித்தாள் .
“சத்தியன் ஏழு மாதத்திலியேயே குழந்தை பிறக்க போகுதாம் . கெதியில வாங்கோ , எனக்கு பயமா இருக்கு .”
சத்தியனும் வந்து மருத்துவருடன் கதைத்தான். ஒன்றும் செய்ய முடியாது. பிள்ளை பிறக்கத்தான் வேணும். தீவிர சிகிச்சை பிரிவில் சில மாதங்கள் வைத்துக் கண்காணித்து பிள்ளையைக் காப்பாற்றிவிடுவோம் என்று சொன்னார்கள்.
எதுவும் கதைத்து யாருக்கும் சொல்லி தயாராக முன்னரேயே இரவோடு இரவாக அகரன் பிறந்து விட்டான். பிள்ளையை பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தார்கள். இரண்டாம் நாள் அவளை வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள். ஒவ்வொரு நாளும் பிள்ளைக்கான பாலை வெளியேற்றி எடுத்துக் கொண்டு போய் கொடுக்க வேண்டி இருந்தது. பிள்ளை பிறந்த களை தெளிய முன்னரேயே வைத்தியசாலைக்கும் வீட்டிற்கும் அலைந்து களைத்து விட்டாள். சத்தியனும் பாவம் தான். இரண்டு வேலையை ஒரு வேலை ஆக்கி , வீடு, வேலை, வைத்தியசாலை என்று அலைந்து களைத்து மூன்று மாதம் கழித்து பிள்ளை வீடு வந்த போது முகத்தில் ஒரு மூப்பு தெரிந்தது. பிள்ளை வீடு வந்த அடுத்த நாளே மீண்டும் பழையபடி இரண்டு வேலைக்குப் போகத் தொடங்கி விட்டான். இப்ப பிள்ளையின் செலவுகளும் கூடி விட்டதே.
நந்தினிக்கு எல்லாம் புதிதாக இருந்தது, பிள்ளையை எப்படித் தூக்குவது, தலையை இப்படிப் பிடிக்கலாமா, அழும் குழந்தையை என்ன செய்வது, பிள்ளை பால் குடிக்குதில்லை, ஏவரை வரேல்லை, அதைச் சாப்பிடலாமா , இதைச் சாப்பிடலாமா, பிள்ளைக்கு கிரந்தி வருமா ? ஆயிரம் கேள்விகள், பயங்கள். நேரம் காலம் பார்க்காமல் வீடியோவில் வந்து தீர்வு சொன்ன அம்மா இல்லாமல் என்ன செய்திருப்பாளோ ? பிள்ளையைப் பார்ப்பது, சமையல், வீடு துப்பரவு செய்வது, உடுப்புத் தோய்ச்சு மடிச்சு வைப்பது என்று மனமும் உடலும் களைத்துத் தான் போனாள். ஆனாலும் எதையும் சத்தியனுடன் கதைத்ததில்லை. களைத்து விழுந்து வருபவனிடம் இதையும் ஏன் சொல்லுவான் என்ற எண்ணம் தான்.
ஆனால் சத்தியனுடன் இதை எல்லாம் கதைக்காதது பிழையோ ? அதனால் தான் சில விடயங்களை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லையோ என்ற எண்ணம் தவிர்க்க முடியாமல் இப்பொழுது எல்லாம் தோன்றிக் கொண்டேயிருந்தது. அவளை அறியாமல் பெரு மூச்சு ஒன்று வெளியேறியது. மெல்லத் தலையை திருப்பிப் பார்த்தாள். அகரனை மடியில் இருத்தியபடி கதிரையில் சாய்ந்த வண்ணம் ஓய்வாக இருந்த சத்தியன் மேல் அன்பு பிறந்தது. பாவம் ! அவருக்கும் இந்த ஓய்வு தேவை தான். சனி ஞாயிறு கூட ஓய்வில்லாமல் ஓடி கொண் டிருந்தார்.
பார்வை அகரன் மேல் படிந்தது. வழமை போலவே என்னவென்று அறியாத பயமும் குழப்பமும் மனதில் தோன்றியது. ஏதோ ஒன்று பிழை என்பது போல் சில காலமாகத் தோன்றிக் கொண்டே இருந்தது. இரண்டு மூன்று தடவை குழந்தை மருத்துவரிடமும் தன் பயத்தைக் கூறினாள் . அவர் சிரித்துக் கொண்டே, உங்கள் குழந்தை மிக ஆரோக்கியமாக உள்ளது என்று கூறினார். முதல் குழந்தை தொடர்பாக தாய்மாருக்கு வரும் பயம் என்று அவர் நினைப்பது புரிந்தது. அவர் எல்லாம் நன்றாக உள்ளது என்று கூறிச் சிரிக்கும் போது தன்னை நினைத்து மெலிதாக வெட்கம் கூட வந்தது. மெய்யாகவே இது புதுத் தாய்மாருக்கு வரும் குழப்பங்கள் தான் என்று தோன்றியது. ஆனாலும் மீண்டும் வீடு வந்து தனியாக இரவு சத்தியன் வரும் வரை பிள்ளையைப் பார்த்துக் கொண்டு இருக்கும் போது ஏதோ பிழையாகப் பட்டது. மனதில் பயம் வந்தது. சத்தியன் வீடு வந்து பிள்ளையைத் தூக்கி விளையாடும் போது எல்லாப் பயங்களும் மீண்டும் சூரியனைக் கண்ட பனி போல மறைந்து விடும்.
பயங்களும் சந்தேகங்களும் கண நேரத் தெளிவுமாகப் போராடிக்கொண்டிருந்தவளுக்கு எந்நேரமும் சத்தியன் அருகிலேயே இருக்கும் இந்த பயணம் நன்றாக இருந்தது. மனதில் ஒரு துணிவும் நம்பிக்கையும் வந்தது.
இவள் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்து சத்தியன் தலையை திருப்பி இவளை நோக்கிச் சிரித்தான். நந்தினியும் மெல்லிய வெட்கத்துடன் சிரித்தாள். புதிதாகக் கல்யாணம் ஆன பொழுது இருந்த வெட்கமும் நெருக்கமும் இப்பொழுது மீண்டும் வந்தது போல் இருந்தது. சத்தியன் தலையை அசைத்து அருகில் இருந்த கதிரையைக் காட்ட, அவள் மெதுவாக நடந்து போய் அதில் அமர்ந்து கொண்டாள். கையை நீட்டி சத்தியன் அவளுடைய கையை பிடித்து கொண்டான்.
“தாங்க்ஸ் நந்தினி !”
” என்னத்துக்கு இப்ப எனக்கு தாங்க்ஸ் சொல்லுறீங்கள் ?”
” இந்த பயணத்திற்கு ! பிள்ளையையும் பார்த்து, சமைத்து , வீட்டு வேலை எல்லாம் செய்து, சிக்கனமா குடும்பம் நடத்தி, காசு சேர்த்து இப்படி ஒரு பயணத்தை ஒழுங்கு செய்ததற்கு”
” இதில என்ன சத்தியன் இருக்கு ? நீங்கள் கஷ்டப்பட்டு இரண்டு வேலை செய்து உழைத்த பணம். உங்களுக்கும் ஒரு விடுமுறை தேவைப் பட்டுது. நல்லா களைத்து போனீங்கள்.”
மெதுவாக அவள் கையை அழுத்திக் கொடுத்து, சத்தியன் பார்த்த பார்வையில் அன்பும் காதலும் மிகுந்து தெரிந்தது. கைகளைப் பிடித்தபடி இனிமையான மௌனத்தில் இரண்டு பெரும் ஆழ்ந்து போனார்கள்.
தன் கைக்கடிகாரத்தைப் பார்த்த நந்தினி , “சத்தியன் எழும்புங்கோ சாப்பிட போவம். அகரனுக்கும் சாப்பாடு தீத்த வேணும்” என்றாள். குழந்தையை அன்புடன் பார்த்த சத்தியன், “இவன் நல்ல பிள்ளை என்ன? பசித்தாலும் அழ மாட்டான்” என்றான். நந்தினியின் மனம் துணுக்குற்றது. நல்ல பிள்ளை என்பதாலா அல்லது பசியை உணரவில்லை என்பதாலா ? என்று மனம் கேட்டது.
“அல்லது நீங்கள் நேரம் பார்த்து எல்லாம் செய்யிறதால அவனுக்கு அழ வேண்டி வரேல்லைப் போல” சத்தியன் மனைவியை பெருமையாகப் பார்த்தபடி தொடர்ந்தான்.
இல்லையே! ஒழுங்கான நேரத்தில் சாப்பாடு கொடுக்காமல் நான் சோதித்துப் பாத்தேனே. அப்போது கூட அவன் அழவில்லையே.
நந்தினியின் மனம் தனக்குள் கதைத்துக் கொண்டது.
நந்தினியின் மௌனம் அதன் பின்னால் ஆர்ப்பரிக்கும் கடல் போல் இருந்த மனதை மறைக்கும் முகமூடி என்பது சத்தியனுக்குப் புரியவில்லை போலும். உணவறையை அடைந்து அகரனை அருகில் உள்ள கதிரையில் இருத்தி சாப்பாடு ஊட்டினாள். பிள்ளை எங்கோ பார்த்தபடி இருந்தது. கண் ஒரு இடத்திலேயே நிலைத்து இருந்தது. எதையும் வயதுக்குரிய ஆர்வத்துடன் பார்ப்பது போல் தெரியவில்லை.
“அகரன் இங்கை அம்மாவை பாருங்கோ வாயை ஆவென்றுங்கோ.”
மெதுவாக, மிக மெதுவாகத் தலையைத் திருப்பிய பிள்ளையின் கண்கள் அவளை சலனமற்று ஊடுருவின. சில்லென்று வழமையான குளிர் உணர்வொன்று அவள் உடம்பெங்கும் பரவியது. சாப்பாட்டை பிள்ளையின் வாய் அருகே கொண்டு சென்றாள். பிள்ளை மெதுவாக வாயைத் திறந்தது. சாப்பாடு உள்ளே போனதும் டப்பென்று வாயை மூடியது.
அருகில் இருந்த சத்தியன் சிரித்தான். “பாருங்கோ அவரை ! பெரிய ஆள் மாதிரி”
பெரிய ஆள் மாதிரியா அல்லது பொம்மை மாதிரியா நந்தினியின் மனம் மீண்டும் கேள்வி கேட்டது.
மூவரும் சாப்பிட்டு முடித்ததும் தங்களுடைய கேபினுக்குப் போனார்கள். சத்தியன் டீவியைப் போட நந்தினி அகரனுடன் குளியலறை நோக்கிப் போனாள். தண்ணியை அளவான சூட்டில் திறந்து விட்டு குழந்தையை குளியல் தொட்டியில் இருத்தினாள். சவர்க்காரத் திரவத்தை எடுத்து கையில் ஊற்றி குழந்தையின் உடம்பில் மெதுவாகத் தேய்க்கத் தொடங்கினாள். தேய்க்கத் தேய்க்க சிறிய முத்துப் போல ஏதோ கையில் உருண்டு வந்தது. மெல்லிய வெளிச்சத்தில் என்னவென்று தெரியவில்லை. கையில் அவற்றை எடுத்துக்கொண்டு லைட்டிற்கு கிட்டப் போய் உற்றுப் பார்த்தாள். அவை பிளாஸ்டிக் போல் தெரிந்தது. சவர்க்கார நுரையை கழுவி விட்டு கையை கண்ணுக்கு கிட்ட கொண்டு வந்து பார்த்தாள்.
பிளாஸ்டிக்.
திரும்பி குழந்தையை நோக்கி ஓடினாள். நீரை ஊற்றி சவர்க்காரத்தைக் கழுவினாள். மெல்லிய துவாலையை எடுத்து மெதுவாகக் குழந்தையைத் துடைத்தாள். குழந்தையின் தோலில் இருந்து சிறு சிறு முத்துக்களாக பிளாஸ்டிக் வந்து கொண்டே இருந்தது.
சத்தியன் ! கத்தியபடி ஓடினாள், ஓடினாள், ஓடிக் கொண்டே இருந்தாள். சத்தியன் எங்கோ தூரத்தில் இருப்பது போலவும் சத்தியனிடம் போவது கடினம் போலவும் தெரிந்தது. மீண்டும் குரல் உயர்த்தி கத்தினாள்.
“சத்தியன் ! சத்தியன்!”
” நந்தினி ! நந்தினி ! எழும்புங்கோ! எழும்புங்கோ! ” யாரோ தன்னைப் பிடித்து குலுக்குவது தெரிந்து அலறிக் கொண்டு எழும்பினாள்.
சத்தியன் அவள் தோள்களை பிடித்து உலுக்கிக் கொண்டு இருந்தான்.
“என்ன நந்தினி கனவா ? ஏன் இப்படி கத்தினீங்கள் ? பிள்ளை எழும்பப் போறான் ?
நந்தினி பிள்ளையைத் திரும்பிப் பார்த்தாள். பிள்ளை தூங்கிக் கொண்டு இருந்தது.
” பிளாஸ்டிக் பொம்மை எழும்பாது”
” பிளாஸ்டிக்கோ! என்ன பிளாஸ்டிக் ? நந்தினி ! என்ன கனவு கண்டனீங்கள் ? போய் முகத்தை கழுவிட்டு வாங்கோ”
நந்தினி அகரனை மீண்டும் திரும்பிப் பார்த்தாள். பிள்ளை அமைதியாகத் தூங்கிக் கொண்டு இருந்தது. பிள்ளையை குளிக்க வார்த்து வளத்தி விட்டு, தான் நித்திரை தூங்கி இருக்க வேண்டும் என்று விளங்கியது. என்ன கனவு இது. ஏன் இப்படி ஒரு பயங்கரக் கனவு? நான் தேடித் தேடி வாசிக்கிற விஷயங்கள் தான் கனவா வருகுதா? அல்லது இந்த கனவுக்குப் பின்னால் உண்மை இருக்கிறதா?
…………………..
குழந்தை குறை மாதமாகப் பிறந்தது நந்தினியை மிகவும் பாதித்து இருந்தது. மருத்துவ ரீதியாக எந்தப் பயமும் இல்லை, குழந்தை உடல், மன நலத்துடன் இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறியபோதும் நந்தினி தேடித் தேடி வாசிக்கத் தொடங்கினாள்.
பல ஆய்வுகள் குறை மாதமாக நிறைய குழந்தைகள் பிறப்பதற்கு பிளாஷ்டிக்கும் ஒரு காரணம் என்று கூறின. உணவுப்பொருட்கள் அடைத்து வரும் பிளாஸ்டிக் இல் உள்ள ப்ஹதலேற்(phthlate ) பத்து வீதமான குழந்தைகள் குறை மாதமாகப் பிறப்பதற்குக் காரணம் என்று சில ஆய்வுகள் கூறின. ஐக்கிய இராச்சியத்தில் நடந்த ஆய்வு ஒன்று, ஆய்வு செய்யப்பட எட்டுக் குழந்தைகளில் நான்கு குழந்தைகள் பிளாஸ்டிக் மூலக்கூறுகளுடன் பிறந்ததாகக் கூறியது. அக்குழந்தைகளுக்கு ஒரு பெயரும் வைத்திருந்தார்கள். சைபார்க் குழந்தைகள் (cyborg). சைபார்க் குழந்தைகள் என்றால் மனிதக் கலங்களுடன் பிளாஸ்டிக் கலங்களும் சேர்ந்த குழந்தைகள். மனிதனும் இயந்திரமும் இணைந்த சைபார்க் எப்படி வாழும், எப்படி உண்ணும், எப்படி உறங்கும் ? அது ஆணா? பெண்ணா? என வலைத்தளம் முழுதும் பரவிக் கிடக்கும் விவாதங்களும் தகவல்களும் பயமூட்டின. அக்குழந்தைகளின் உடலில் உள்ள பிளாஸ்டிக் அவர்களின் உள உடல் வளர்ச்சியை, உணவுச் செரிமானத்தை, இனப்பெருக்கத்தைப் பாதிக்கும் என ஆய்வுகள் கூறின. மைக்ரோ பிளாஸ்டிக்கும் நானோ பிளாஷ்டிக்க்கும் உணவு மூலமும் , தண்ணீர் போத்தல்கள் மூலமாகவும், பிளாஸ்டிக்காலான சாப்பாட்டுப் பெட்டிகளை மைக்ரோவேவில் சூடு பண்ணும் போதும், கடல் உணவுகள், ஏன் காற்றில் இருந்தும் கூட உடலினுள் போவதாகக் கூறுகிறார்கள்.
நந்தினி அதன்பின் மெது மெதுவாக வாழ்க்கை முறையை மாற்றி கொண்டாள் என்பதும் உண்மையே. பிளாஸ்டிக் போத்தல்களைத் தவிர்த்துக் கொண்டாள். பிளாஸ்டிக் உறையில் வரும் உணவுகளைத் தவிர்த்தாள். மைக்ரோவேவில் பிளாஸ்டிக், பொலித்தீன் பொருட்களை வைப்பதைத் தவிர்த்தாள்.
பிள்ளை பிறந்த பின் மகப்பேற்றின் பின் பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் நந்தினிக்கு அதிகமாகவே இருந்தது . தாயின் உதவியற்ற தனிமை , சத்தியன் நின்று சாப்பிட கூட முடியாமல் வேலை வேலை என்று ஓடிக்கொண்டு இருந்தது, தனியாக தீவிர சிகிச்சை பிரிவில் குழாய்கள் பூட்டிய நிலையில் இருந்த குழந்தையை ஒவ்வொரு நாளும் பார்த்தது என அனைத்தும் அவளது மன அழுத்தத்தை மேலும் அதிகரித்தது. அதை விடவும் முதல் பிள்ளையை பெற்ற இளம் தாய் மார்களுக்கு ஏற்படும் அனைத்து பயங்களும் நந்தினிக்கும் ஏற்பட்டது பிள்ளை பிறந்த பின் தன் உடலும் மனமும் வேதனையில் இருந்த வேளையில் தனித்திருந்த நந்தினியின் மனம் இத்தரவுகளை உள்வாங்கிக் கொண்டது. ஒவ்வொரு தடவையும் அகரன் வித்தியாசமாக எதுவும் செய்யும் போதும் தன் குழந்தை சைபார்க் குழந்தையோ என்று மனது மருட்டியது. எல்லாவற்றிட்கும் ஒரு காரணம் தேடியது. இருக்காது, இது என் பயந்த மனதின் பிரமைகள் என நந்தினி தன் தலையில் தட்டிக் கொள்வாள் இன்றுபோலவே. நானும் பயந்து சத்தியனையும் குழப்ப வேண்டாம். விடுமுறையை நன்றாகச் சந்தோசஷமாக கழிப்போம் என நினைத்துக் கொண்டாள்.
தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்து சத்தியனுடன் சந்தோஷமாக விடுமுறையை கழித்துவிட்டு மனநிறைவோடு வீடு திரும்பினாள் நந்தினி. வீடு திரும்பியதும் பழைய படி சத்தியன் வேலை வேலை என்று ஓடத் தொடங்கினான். நந்தினியும் வீட்டு வேலை, சமையல் ,கொண்டு போன உடுப்புகள் தோய்ப்பது, மடித்து வைப்பது என்று வேறு எந்த நினைவும் இல்லாமல் வேலை செய்தாள்.
குழந்தையைத் தூங்க வைத்து விட்டுச் சமைத்துக் கொண்டிருந்தபோது, மாடிப்படியில் யாரோ உருண்டு விழும் சத்தம் கேட்டது. அகரன் கட்டிலை விட்டுக் கீழே இறங்க முடியாமல் உயரமாகத் தடுப்புப் போடப் பட்டிருக்கிறதே. ஓடும் போதே மனம் எண்ணியது. அகரனே தான். மாடிப் படியின் அடியில் விழுந்து கிடந்தான். கத்திக் கொண்டு ஒடிப்போய் குழந்தையை தூக்கினாள். பயமும் கவலையுமாக இருந்த நந்தினிக்கு குழந்தை அழவில்லை என்பது மனதில் படவில்லை. குழந்தையின் உடல் முழுவதும் அவசர அவசரமாக தடவினாள். உள்ளங்கையில் சிறு வெடிப்புத் தென்பட்டது.
“அகரன் அப்பிடியே இருங்கோ . அம்மா ஓடிப்போய் பிளாஸ்டர் எடுத்துக் கொண்டு வாறன்”. கூறியபடியே ஓடிப்போய்க் குளியலறை அலுமாரியில் இருந்த பிளாஸ்டர் பெட்டியை எடுத்துக் கொண்டு வரும் போது மூளை வேலை செய்யத் தொடங்கியது. கால்கள் தானாக வேகம் குறைந்தன. அகரன் எப்படித் தடுப்பைத் தாண்டி வந்தான்? விழுந்த அகரன் ஏன் அழவில்லை ? கையில் பெரிய ஒரு வெடிப்பு. ஆனால் ஏன் இரத்தம் வரவில்லை?
மெல்லப் படியிறங்கிக் குழந்தையைப் பார்த்தாள். குழந்தை இருந்த இடத்தில் சுவரைப் பார்த்தபடி அப்படியே இருந்தது.
அகரன் ! மெல்ல அழைத்தாள். எந்த அசைவும் இல்லை.
அகரன் ! கத்திக் கூப்பிடடாள்.
மெல்ல மெல்ல விசையில் ஆடும் பொம்மை போல குழந்தை திரும்பியது.
உணர்ச்சியற்ற கண்களால் உற்றுப் பார்த்தது!
சிரித்தது !

Leave a comment