
நீண்டகால முன்னேற்றத்துக்கான ஒரு முக்கியமான விஷயம் கைசென் (Kaizen) என நான் நம்புகிறேன். தொடர்ச்சியான முன்னேற்றத்தில் எனக்கு உள்ள நம்பிக்கையே என்னை வழிநடத்தி வந்தது. என் கற்றலுக்கான தீவிர விருப்பம் காரணமாக, நான் எப்பொழுதும் எதையாவது கற்றுக் கொண்டே இருந்தேன். இருக்கிறேன். எழுத்தாற்றல் தொடர்பான பாடங்கள் , மருத்துவ சொற்கள், Lean Six Sigma பயிற்சி, யோகா, பியானோ பாடங்கள் போன்ற பல துறைகளில் பயணித்தேன். சில நேரங்களில் இந்த பயணங்கள் நோக்கமற்றவையாகத் தோன்றினாலும், பின்னோக்கிப் பார்த்தால் ஒவ்வொரு படியும் எனது வாழ்க்கையை சீரமைத்து உள்ளன. வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் ஆர்வத்துடனும் ரசனையுடனும் கடப்பதற்கும் இன்று “நான்” யார் ஆக உருவாக்கி உள்ளேன் என்பதற்கும் தொடர்ச்சியான எனது கற்றலே முக்கிய பங்கு வகித்தது.
கைசென் என்பது ஒரு ஜப்பானிய தத்துவமாகும், இது சிறிய, தொடர்ச்சியான முன்னேற்றங்களை வலியுறுத்துகிறது. இவை தான் நிலையான மாற்றங்களை உருவாக்கும் அடித்தளமாக இருக்கும். இன்றைய வேகமான உலகத்தில் நாம் விரைவான முடிவுகளுக்காக ஓடிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் உண்மையான வளர்ச்சி என்பது மெதுவாக, நிதானமாக நிகழும் முன்னேற்றத்திலிருந்து தான் வருகின்றது. “ஓட்டத்தில் வென்ற ஆமை”யை நாம் மறக்கக்கூடாது.
தொடர்ந்து மேம்பட விரும்புபவர்கள், சிறியதாகத் தொடங்கலாம். பலர் நூல்கள் வாசிக்கும் பழக்கத்தை அடியோடு விட்டு விடடார்கள். ஆர்வமிருந்தாலும் கூடப் பொறுமையாக அவர்களால் வாசிக்க முடியாது. நீங்கள் கைசன் முறையில் ஒரு பக்கம் படித்தல், இரண்டு நிமிடம் தியானத்தில் அமர்தல் அல்லது ஐந்து நிமிடம் யோகா செய்வது போன்று எளிய செயல்கள் மூலம் ஆரம்பிக்கலாம். சிறு சிறு துளிகளாக உங்கள் முன்னேற்றத்தைப் பதிவு செய்யுங்கள். உங்கள் சிறிய வெற்றிகளை கொண்டாடுங்கள். உங்களை ஊக்குவிக்கும் நட்புக்கள் உறவுகளை உங்களை சூழ வைத்திருங்கள். நினைவில் வையுங்கள்: அடி மேல் அடி அடிக்க அம்மியும் நகரும்! தொடர்ந்து எடுக்கப்படும் சிறிய அடிகளே ஆழமான மாற்றங்களை உருவாக்குகின்றன.

Leave a comment