
நாம் அடிக்கடி நம்முடைய நம்பிக்கைகள், வாழ்க்கை மற்றும் வாழ்க்கைத் தேர்வுகள் குறித்து நபிக்கையற்ற சுய உரையாடலில் ஈடுபடுகிறோம். ஒரு கணம் நிறுத்தி அந்த சுய உரையாடலைக் கவனித்தால், பெரும்பாலானவை ஊகங்கள், பயம் மற்றும் சுய சந்தேகம் அடிப்படையிலேயே இருப்பதை உணரலாம். அந்த பயங்களையும் சந்தேகங்களையும் தொடர்ச்சியாக வெளிப்படுத்துவதன் மூலம் நாம் நம்மையே தோல்விக்குத் தயார்ப்படுத்துகிறோம். இது சுய தடைகள் (self-sabotage) உருவாக வழிவகுக்கிறது.
நானும் இவ்வாறு தான் எனது மனதுடன் உரையாடிக் கொண்டு இருந்தேன்—வேலை, வாழ்க்கை, கல்வி குறித்து “ அப்படி இருந்தால் ?” என்ற கேள்வியுடன் தொடங்கும் எதிர்மறையான சிந்தனைகள் எனது முடிவுகளைக் எதிர் மறையாகக் காட்சிப் படுத்தி, எதிர் மறையான விளைவுகளை உருவாக்கி, வாய்ப்புகளை இழக்கச் செய்தன. இச் சந்தேகங்கள் என் மனதை சுயத் தடைகளால் நிரப்புகின்றன என்பதை உணர்ந்தேன். அந்த எண்ணங்களுடன் சண்டையிடாமல், அந்த எண்ணங்களை அங்கீகரித்து, என் தலையின் பின்னே சற்று மெதுவாகத் தட்டி அடிக்கடி என்னை ஞாபகப் படுத்தி , அந்த சிந்தனையை நேர்மறையான காட்சித் தோற்றங்களாக மாற்ற முயற்சி செய்தேன். தொடர்ச்சியான பயிற்சியின் மூலம், என் மனப்பாங்கை மாற்றி, என் வாழ்க்கைக் கதையினை எழுதும் கட்டுப்பாட்டை மீண்டும் பெற்றுக்கொண்டேன்.
எதிர்மறை சுய உரையாடலை எப்படி மாற்றுவது?
- எதிர்மறை எண்ணங்களை உணருவதும் அடையாளம் காண்பதுமே முதல் படி. பல சமயங்களில் அவ்வாறான எதிரான எண்ணப் போக்கைக் கொண்டிருப்பதையே உணர மாட்டோம்.
எதிர்மறை சிந்தனைகள் எப்போது தோன்றுகிறது என்பதை கவனியுங்கள். அவை தோன்றும் போது அதற்காக உங்களைக் கண்டித்துக் கொள்ளாமல் அந்த எண்ணங்களை அங்கீகரியுங்கள் – இது மாற்றத்திற்கான முதல் படியாகும். - எண்ணங்களுடன் சவால் விடுங்கள் மற்றும் மறுபரிசீலனை செய்யுங்கள்:
உங்கள் எதிர்மறையான எண்ணங்கள் உண்மைத் தன்மை உள்ளவையா அல்லது வெறும் ஊகங்களா என்பதை ஆராயுங்கள். நம்முடைய உணர்வுகளை உண்மைகளாக எண்ணுகிறோம், ஆனால் “உணர்வுகள் உங்களது புரிதலே அன்றி உண்மை அல்ல” என்பதைக் கவனியுங்கள். உங்கள் உணர்வால் வலுப்பெறும் மிகைப்படுத்தப்பட்ட அல்லது தவறான எண்ணங்களை சமநிலையான, நிஜமான சிந்தனைகளால் மாற்றுங்கள். - நேர்மறையான உறுதிமொழிகளைப் பயன்படுத்துங்கள்:
எதிர்மறை நம்பிக்கைகளை எதிர்க்கும் உறுதிமொழிகளை உருவாக்குங்கள். இந்த நேர்மறை உரையாடல்களை மீண்டும் மீண்டும் சொல்லும்போது உங்கள் மூளை உங்கள் வலிமைகள் மற்றும் நீங்கள் வெற்றி அடைவதற்கான சாத்தியம் தொடர்பாக நம்பிக்கை கொள்ளத் தொடங்கும். - வெற்றிக் குறிப்புகள் :
சிறு துளி பெரு வெள்ளம் என்று கூறுவார்கள். சிறிய வெற்றிகளையும் பதிவு செய்யுங்கள். அந்த சிறு வெற்றியை அடைந்ததைக் கொண்டாடுங்கள் இது உங்கள் தொடர்பான எண்ணப் போக்கை மாற்ற உங்களுக்கு உதவுவதுடன் வாழ்க்கை தொடர்பான நம்பிக்கையை வளர்க்கிறது. - மனநிலையைச் சீராக்கும் பயிற்சிகள் மற்றும் தியானத்தில் ஈடுபடுங்கள்:
உங்கள் எண்ணங்கள் நினைவுகளை அந்தக் கணத்தில் இருத்தி வைக்க உதவும் பயிற்சிகளைச் செய்யுங்கள். உங்கள் சிந்தனைகளை அதனுள் ஆழ்ந்து போகாமல் கவனிக்க உதவுவதால், எதிர்மறை சுய உரையாடல்களின் தாக்கத்தை குறைக்க கவனயோகம் அல்லது தியானம் உதவும்.
எளிமையாகத் தியானம் செய்யும் முறைகளை இன்னொரு அதிகாரத்தில் பார்க்கலாம்

Leave a comment