
நாம் வாழும் இந்தக் காலமும் சமூகச் சூழ்நிலைகளும் குறைபாடுகளைப் பெரிது படுத்தி, அதன்மூலம் ஒரு நிறைவடையாத மனப் பாங்கையும் நிரந்தரமற்ற தன்மையையும் ஏற்படுத்துகின்றன. அனைத்தும் குறைவே இல்லாமல் நூறுசத வீதமாக இருக்க வேண்டும், அந்த சிறப்பான நிலை நிரந்தரமானதாக இருக்க வேண்டும், இல்லையெனில் அச்செயல் தரம் குறைந்ததாகக் கணிக்கப் படுகின்றது. செயலைச் செய்பவர் திறன் குறைந்தவராகக் கணிக்கப் படுவார். இதை எழுதிக் கொண்டு இருக்கும் போதே எனது மனமும் ஒரு விவாதத்தை நடத்திக் கொண்டே இருந்தது. ஏனெனில் எமது கல்வி முறைமையும் நாம் வாசிக்கும் விடயங்களும் எம்மை அவ்வாறே தயார் படுத்துகின்றன. எதையும் சரியாகச் செய்ய முயல்வதும் அதற்கான திறனை வளர்த்துக் கொள்வதும் தேவையானதே ஆனால், அதுவே மன அழுத்தத்தைத் தருவதாக அமையக் கூடாது.
வபி-சபி (Wabi-Sabi) என்ற பாரம்பரிய ஜப்பானிய தத்துவம், இந்த மனநிலைக்கு எதிராக ஒரு தத்துவத்தைத் தருகிறது. இது குறைபாடு, நிலையற்ற தன்மை, மற்றும் முடிவடையாத நிலை ஆகியவற்றில் அழகைக் காண்பதற்குக் கற்றுத்தருகிறது.
வபி (Wabi) என்பது எளிமை மற்றும் தாழ்மையை வலியுறுத்துகிறது.
சபி (Sabi) என்பது இயற்கையான மூப்பை மற்றும் நிலையற்றதன் அழகை ரசிக்கக் கற்றுத் தருகிறது. கூடவே காலத்தின், காலம் கடந்த பழைமையை, வரலாற்றை மதிக்கக் கற்றுத் தருகிறது
வபி-சபி தத்துவத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாம் நம்மை நாமே ஏற்றுக் கொள்ளும் தன்மையை வளர்த்துக்கொள்கிறோம். இது பதட்டத்தைக் குறைத்து மன அமைதியை ஏற்படுத்துகிறது.
2020 ஆம் ஆண்டு Frontiers in Psychology இதழில் வெளியான ஒரு ஆய்வில், குறைபாடுகளை மதிப்பவர்களுக்கு (வபி-சபியின் மையக் கருத்து) வாழ்க்கை தொடர்பாக அதிக திருப்தியும், குறைந்த மன அழுத்தமும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை ஏற்றுக்கொள்வதன் மூலம், நாம் மன அமைதி மற்றும் நன்றியுணர்வை வளர்த்துக்கொள்கிறோம். வபி-சபி நமக்கு இருக்கின்ற பொருட்களையும், நம்மைச் சுற்றியுள்ள மக்களையும், அவர்கள் பூரணமில்லாதவர்களாக இருந்தாலும் கூட, மதிக்க மற்றும் நேசிக்க கற்றுத்தருகிறது.

Leave a comment